Skip to main content

"கலைஞரை தினமும் சிறையில் சந்தித்த எஸ்.ஏ.சி" - அமீர் பகிர்ந்த கடந்தகால நினைவுகள்!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

Ameer

 

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு, படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.  

 

இந்த விழாவில் இயக்குநர் அமீர் பேசுகையில், "நான் பள்ளியில் படித்த காலத்தில் எஸ்.ஏ.சியின் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை பார்த்தேன். பார்த்தது மட்டுமல்ல ஒரு படம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்தேன். அவருடைய சாட்சி படம் வெளியானபோது மக்கள் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை பார்ப்பதற்காக மதுரையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு வந்திருந்தார். நான் என் நண்பர்களுடன் பள்ளியை கட் அடித்துவிட்டு அன்று அந்தப் படத்திற்கு சென்றிருந்தேன். சின்ன வயதிலேயே சினிமா மீது எனக்கு ஆர்வம் வந்துவிட்டதால் படம் வெளியாகும்போது அதன் இயக்குநர் யார் என்று கவனிப்பேன். அதனால் எனக்கு எஸ்.ஏ.சியை முன்னரே தெரியும். அன்று திரையரங்கில் அவரைப் பார்த்தவுடன் சார் நீங்கதான இந்தப் படத்தோட டைரக்டர்... படம் நல்லா இருக்கு என்று அவரிடம் சென்று சொன்னேன். யார் இந்த சின்னப்பையன் என்று அவர் என்னை வித்தியாசமாக பார்த்தார். பின், நான் சினிமாவிற்கு வந்து ராம் படத்தை இயக்கினேன். அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகு விஜய்க்கு கதை சொல்ல அவரை சந்தித்தேன். அப்போது வேறு ஒரு படத்தை இயக்கி கொண்டிருந்தார் எஸ்.ஏ.சி. அன்றிலிருந்து இன்றுவரை, எப்படி இவரால் இவ்வளவு எனர்ஜியோடு பயணிக்க முடிகிறது என்று எஸ்.ஏ.சியை வியந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி போல எஸ்.ஏ.சி என்ற மூன்றெழுத்தும் தமிழ் சினிமாவில் ஓர் அடையாளம். அதை அவ்வளவு சீக்கிரம் அழித்துவிட முடியாது. 

 

பைபிளில் உள்ள விஷயங்களைக் கூறும்போது தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று எஸ்.ஏ.சி சார் கூறினார். இதில் தவறாக எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை. இந்த நாட்டில் பிறந்த அனைவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்பற்றலாம்; மதப்பிரச்சாரம் செய்யலாம். அதற்கான உரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு எஸ்.ஏ.சியை நடிகர் விஜய்யின் அப்பா என்ற அளவில்தான் தெரியும். இவருடைய பயணமும் போராட்டக்குணங்களும் தெரியாது. அதை சொல்லவேண்டிய பொறுப்பு என்னை மாதிரியான ஆட்களுக்கு இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கலைஞரின் கதையில் நீதிக்கு தண்டனை படம் எடுத்தார். அந்த சமயத்தில் ஒரு வழக்கில் கலைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். தினமும் சிறைக்குச் சென்று கலைஞரிடம் வசன பேப்பரை வாங்கிவருவார் எஸ்.ஏ.சி. இந்த வரலாறு இன்று எத்தனை பேருக்குத் தெரியும். இவர் விஜய் என்ற ஒரு ஹீரோவை உருவாக்கிய இயக்குநர் மட்டுமல்ல. இந்த சமூகத்தில் நிலவிய அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடிய முக்கியமான இயக்குநர் எஸ்.ஏ.சி. இப்படி ஒரு செயலைச் செய்தவர் தமிழ் சினிமாவிலேயே யாரும் கிடையாது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்