கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எ.ஏ. செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது சிவகுமார், சூர்யா, ஜோதிகா சிம்பு, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். அண்மையில் ரஜினி படத்தை பார்த்து கமலிடம் தொலைப்பேசியிலும் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, தனது குடும்பத்தினருடனும் கட்சி நிர்வாகிகளுடனும் அமரன் பட சிறப்பு காட்சியை பார்த்தார். பின்பு தனது எக்ஸ் பக்கத்தில், “இராணுவ வீரர்களின் வாழ்வியலை கண்ணாடி போல் பிரதிபலித்து காலத்தால் அழியாத காவியம் போல், திரையில் தீட்டப்பட்ட ஓவியம் போல் திகழ்கிறது அமரன். இத்திரைக்காவியத்தில் சகோதரர் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தேசபக்தி காவியத்தை திரையில் பார்த்த ஆத்மார்த்த உணர்வு அமரனை கண்டுகளித்த போது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்பட்டது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அற்புதமான நெகிழ்வு.
தமிழகம் கடந்து தேசமெங்கும் அமரன் திரைக்காவியத்திற்கு மக்கள் அளித்துள்ள மகத்தான வரவேற்பு எல்லையில் கொட்டும் மழையிலும், உயிரை உறைய வைக்கும் கொடும்பனியிலும் தன்னையே வருத்திக் கொண்டு அனுதினமும் உயிரை பணயம் வைத்து தேசம் காக்க போராடும் இராணுவ வீரர்களுக்கு அளிக்கும் அன்பார்ந்த கெளரவம் என்பதில் ஐயமில்லை. இராணுவ வீரர்கள் தேசத்திற்காக செய்கிற தியாகங்களையும், எல்லையில் அவர்கள் எதிர்கொள்கிற இன்னல்களையும் நாம் அறிந்து கொள்ள இத்திரைக்காவியம் ஓர் ஆவணம் போல் அமைந்துள்ளது.
மக்கள் அனைவரும் குடும்பத்துடன் இத்திரைக்காவியத்தை காணவேண்டும் என்பது எனது அபிப்ராயம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சகோதரர் சிவகார்த்திகேயன் இருவரின் திரையுலக வரலாற்றிலும் அமரன் எனும் காலத்தால் அழியாத அமரகாவியம் என்றென்றும் கலங்கரை விளக்கமாக திகழும் என்பதில் மிகையேதும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, எச்.ராஜாவின் பாராட்டு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எச்.ராஜா எங்கள் அமரன் படத்தை பார்த்து திரைக்காவியம் என மனமார பாராட்டி குழுவினர் அனைவரையும் நெகிழ வைத்தமைக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Amaran உயர்திரு.H.ராஜா அவர்கள், எங்கள் அமரன் படத்தை பார்த்து திரைக்காவியம் என மனமார பாராட்டி குழுவினர் அனைவரையும் நெகிழ வைத்தமைக்கு நன்றி! 🙏 https://t.co/SZoN4VXLpz— Rajkumar Periasamy (@Rajkumar_KP) November 6, 2024