
ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலையடுத்து பஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழகர்களை பாதுகாக்கும் முகமாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தக்குதலுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இரங்கல்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பிரபலங்களும் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “ஏழைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடுரமான தாக்குதல் மனிதநேயத்துக்கும் அதன் அமைதிக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கும் எதிரானது. பஹல்காம் ஒரு அழகான இடம். அந்த இடத்திற்கு ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அந்த பகுதியில் அமரன் பட படப்பிடிப்பை நடத்திய போது அற்புதமான நினைவுகள் உருவானது. அங்குள்ள மக்கள் சுற்றுலா பயணிகளிடம் மிகவும் கருனை காட்டினார்கள். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமரன் படம் காஷ்மீரில் 2014ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது குறிப்பிடத்தக்கது.
#PahalgamTerrroristAttack This cruel act of terror on those poor victims and their families is a severe blow to humanity, peace and progression! 💔⚫️
Beautiful #Pahalgam is the heart of tourism in #Kashmir attracting more than 2crore tourists annually. Have had wonderful… pic.twitter.com/86qRv7KNwj— Rajkumar Periasamy (@Rajkumar_KP) April 23, 2025