



ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் ரஜினி என டாப் சினிமா ஸ்டார்கள் இருவரும் சீரியஸ் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார்கள். கமல் கட்சி தொடக்கம், ரஜினி மன்ற நிர்வாகிகள் நியமனம் என அவர்கள் பரபரப்பாக இருக்க, இந்த சீரியஸ் ட்ரெண்ட் போர் அடித்ததோ என்னவோ, அடுத்த டாப் ஸ்டார்களில் ஒருவரான அஜித்தின் ரசிகர்கள் திடீரென நேற்று ட்விட்டரில் ஒரு புதிய ஹேஷ்டேக் (hashtag)கை உருவாக்கி உலக அளவில் ட்ரெண்டாக்கினர். '#ROARING VISWASAM DIWALI2018' என்ற அந்த ஹேஷ்டேக், அஜித் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவருவதாகச் சொல்லப்படும் 'விஸ்வாசம்' திரைப்படத்தை வரவேற்பதாக அமைக்கப்பட்டுள்ளது. 'விஸ்வாசம்' திரைப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைப்பதாக சமீபத்தில் தான் உறுதியானது.
இந்த ட்ரெண்டுடன் நடிகர் அஜித் சமீபத்தில் நடந்த ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களும் சேர்ந்து கொள்ள, அவரது ரசிகர்கள் இன்னும் குஷியாகினர். வெளியான புகைப்படங்களில், மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, தாய் மோகினி என குடும்பத்துடன் இருக்கிறார் அஜித். 'விஸ்வாசம்' படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திலிருந்து மாறி, பழைய தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தப் படங்களில் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் இருக்கிறார் அஜித். எனவே புதிய படத்தில் அஜித்தின் தோற்றம் பற்றிய கேள்விகள் அவரது ரசிகர்களுக்கு எழுந்துள்ளன.
முன்பெல்லாம், தங்கள் விருப்ப நாயகனுக்கு ரசிகர் மன்ற பலகைகள் வைக்கும்பொழுது, போட்டி நாயகனின் மன்றத்தை விட பெரிதாக வைக்க வேண்டுமென்ற போட்டியிருக்கும். இப்பொழுது போட்டியெல்லாம் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் யூ-ட்யூப் எண்ணிக்கையிலும் என சமூக ஊடகங்களில் தான். போர் அடித்தால் ஹேஷ்டேக் போட்டு கெளம்பி விடுகிறார்கள். நாளை விஜய் ரசிகர்கள் என்ன செய்கிறார்களோ, பார்ப்போம்.