
சென்ற ஆண்டு டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான ஜெய்சிம்ஹா படம் வரை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த அத்தனை படங்களும் பேர் சொல்லும் படங்களாக அமைந்தன. மேலும் தொடர்ந்து நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா இந்த ஆண்டின் பிஸியான நடிகைகளிலும் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். நயன்தாரா அடுத்ததாக இந்த ஆண்டில் இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, கொலையுதிர் காலம், இது தவிர அறிவழகன் இயக்கும் த்ரில்லர் கதையிலும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்கிறார். மேலும் இன்னொரு தெலுங்கு பட வாய்ப்பும் வந்து இருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா நடிக்கவிருக்கும் அடுத்த இரு படங்கள் குறித்த அறிவிப்பு நேற்று ஒரே நாளில் வெளியாகி இருக்கிறது. அதன்படி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக அஜித் ஜோடியாக 'விஸ்வாசம்' படத்திலும், லட்சுமி, மா, குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் கதையிலும் நடிக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது. மேலும் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்கள் என்று தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளன.