நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், 'யாரை நம்பி நான் பிறந்தேன்...' என்ற பாடல் பதிவின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான 'எங்க ஊரு ராஜா' என்ற படத்தில் 'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க...' என ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். இப்பாடலுக்கு கவிஞர் கண்ணதாசன் வரிகள் எழுத, டி.எம். சௌந்தர்ராஜன் பாடியிருந்தார். இந்தப் படம் வெளியானதுபோது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. நான் அந்த நேரத்தில் டீச்சர் ட்ரைனிங் படித்துக்கொண்டிருந்தேன். உடன்படித்தவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இந்தப் படம் பார்த்த நினைவு இன்றும் இருக்கிறது. 'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க...' என்ற பாடல் பதிவு நேரத்தில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயம் பற்றி உங்களுக்கு கூறுகிறேன்.
பொதுவாக சினிமா உலகத்திற்குள் என்ன நடந்தாலும் எம்.ஜி.ஆருக்கு தகவல் வந்துவிடும். அதற்காக அவர் நிறைய ஆட்கள் வைத்திருப்பார். அவர்கள் அவ்வப்போது வந்து எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவித்துவிட்டுச் செல்வார்கள். நாம் அடுத்த என்ன செய்யப்போகிறோம் என்பதைவிட, எதிராளியின் கூடாரத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அறிந்துவைத்திருப்பதுதான் வெற்றியை அடைவதற்கான வழி என்பார்கள். அதை எம்.ஜி.ஆரும் நன்றாக அறிந்துவைத்திருந்தார். 'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்க...' என சிவாஜி படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது என்பது தெரியவந்ததும், எம்.ஜி.ஆரிடம் வந்து இந்தத் தகவலை அவரது ஆட்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை எம்.ஜி.ஆரிடம் வந்து தெரிவித்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரஸ்காரர்; திமுக ஆட்சிக்கு வந்த காரணத்தினால் 'யாரை நம்பி நான் பிறந்தேன்' என்ற வரிகளைப் பாடலில் வைத்திருப்பாரோ என்ற சந்தேகத்தினால் அதை எம்.ஜி.ஆரிடம் வந்து தெரிவித்தனர். அவர்களுக்கு வேறுசில சந்தேகங்களும் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், டி.எம்.எஸ் அவர்களைத் தவிர்த்து நிறைய புதிய பாடகர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தார். அதனால் டி.எம்.எஸ்ஸிற்காக இப்படி வரிகளை கண்ணதாசன் எழுதியிருக்கிறாரோ என்று நினைத்தனர். மேலும், தமிழ்த்தேசிய கட்சி வைத்திருந்த ஈ.வி.கே. சம்பத்தின் ஆதரவாளரான கண்ணதாசன், திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து, தன்னுடைய ஆதங்கத்தை பாட்டில் இவ்வாறு வெளிப்படுத்திக்கொள்கிறாரோ என்றும் நினைத்தனர். எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு அவருக்கென உளவுத்துறை இருந்தது. ஆனால், நடிகராக இருந்தபோதே ஓர் உளவுத்துறையை சினிமா வட்டாரத்திற்குள் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்கள், எதிர்க்கூடாரத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் எம்.ஜி.ஆர் கவனத்திற்கு கொண்டுவந்துவிடுவார்கள். சினிமா வட்டாரத்திலுள்ளவர்களெல்லாம் இவர்களை எம்.ஜி.ஆரின் உளவுத்துறை என்றுதான் கூறுவார்கள். பின்பு விசாரித்ததில் அது படத்தோடு ஒன்றியுள்ள பாடல் காட்சி எனத் தெரியவந்தது.
'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்க...' என்ற பாடலில் பல அற்புதமான கருத்துகளை கண்ணதாசன் கூறியிருப்பார். 'குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே... பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளை சொந்தமில்லே...' பெட்டியிலே பணம் இல்லையென்றால் பெற்ற பிள்ளையும் சொந்தமில்லை என்பது எவ்வளவு அழகான வரி பாருங்கள். இன்றைய காலத்தில் தங்களது பெற்றோர்களை வெறும் ஏ.டி.எம் கார்டுபோலத்தான் குழந்தைகள் நினைக்கிறர்கள். இதுதான் உலக யதார்த்தம். 'தென்னையப் பெத்தா இளநீரு... பிள்ளையப் பெத்தா கண்ணீரு... பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா... பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா... சோதனையைப் பங்குவச்சா சொந்தமில்லே பந்தமில்லே...'. எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் பாருங்கள். முதல் பாதியில் இவ்வாறு விரக்தியை வெளிப்படுத்தியவர், அடுத்து தன்னம்பிக்கை கொடுக்கும் வரிகளை எழுதியிருப்பார்.
'நெஞ்சமிருக்கு துணிவாக... நேரமிருக்கு தெளிவாக... நினைத்தால் முடிப்பேன் சரியாக... நீ யார் நான் யார் போடா போ... ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மலை வரும்... தேடிவரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடிவரும்...'. கடினமாக உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நமக்கான உரிய நேரம் வரும்போது செல்வம் ஓடிவரும் எனப் பாடல் கேட்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும்படி எழுதியிருப்பார் கண்ணதாசன். இன்று 60 வயதைக் கடந்த நிலையில் உள்ள பலருக்கும் இந்தப் பாடல் மிகவும் மிகவும் பிடித்தமான பாடல்.