தன்னுடைய திரையுலக அனுபவங்கள் பலவற்றையும் நம்மோடு நடிகர் பாண்டிச்சேரி ரவி பகிர்ந்துகொள்கிறார்.
அடிப்படையில் நான் ஒரு ஸ்டில் போட்டோகிராபர். என்னுடைய தந்தைக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். திரைப்படத்தில் உதவியாளராக வேலை செய்தபோது தான் சினிமா குறித்து முழுவதும் தெரிந்தது. மின்சார கனவு படத்துக்கு ஒரு சர்ச் தேவைப்பட்டபோது நான் ஒரு சர்ச்சை போட்டோ எடுத்து அனுப்பினேன். அதன் மூலம் ராஜீவ் மேனன் சாரிடம் அசிஸ்டெண்ட் கேமராமேனாக சேர்ந்தேன். ஆனால் நடிப்பின் மீது எனக்கு தொடர்ந்து ஆர்வம் இருந்தது. மணிரத்னம் சார் தான் அலைபாயுதே படத்தில் என்னை நடிகனாக முதலில் அறிமுகப்படுத்தினார். அவரை என்னுடைய குருநாதர் என்றே சொல்லலாம்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சியை உருவாக்குவதில் என்னுடைய பங்கையும் நான் கொடுத்தேன். கைது செய்யப்பட்டாலும் பரவாயில்லை, மணிரத்னம் சாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அந்தக் காட்சியில் ரிஸ்க் எடுத்து நான் வேலை செய்தேன். மணி சார் மகிழ்ச்சியுடன் புன்னகை புரிந்தார். பொன்னியின் செல்வன் ஷூட்டிங் சமயத்தில் தான் கோவிட் வந்தது. அந்த சூழ்நிலையிலும் கிட்டத்தட்ட 20 நாட்கள் பாண்டிச்சேரியில் ஷூட்டிங் செய்தோம். அனைவருக்கும் அடிக்கடி கோவிட் டெஸ்ட் எடுக்கப்பட்டது.
சமையல் வேலையில் ஈடுபட்ட சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அந்த சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதில் என்னுடைய பங்கும் இருந்தது. பொதுவாக மணி சார் நிறைய பேச மாட்டார். செயல் தான் அவருக்கு முக்கியம். சூரியன் தோன்றும் நேரமும் மறையும் நேரமும் மணி சாருக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பின்னணியில் ஒரு ஷாட்டாவது எடுக்க வேண்டும் என்று நினைப்பார். அவருடைய அர்ப்பணிப்புதான் இந்தப் படத்தை வெற்றிகரமாக முடிக்க உதவியது.
இதுவரை நடிகனாக நான் எதுவும் சாதிக்கவில்லை. எனக்கு நிறைய கவனச் சிதறல்கள் இருந்தன. ராஜீவ் மேனன் சாருக்கு அனைத்துமே சரியாக இருக்க வேண்டும். ரவி கே. சந்திரன் சார் சிறந்த அனுபவசாலி. ரவிவர்மன் சார் அனைத்தையும் முறையாக ஆராய்பவர். இயக்குனர் ஜனநாதன் சார் ஒரு கம்யூனிஸ்ட். அவருடைய வாழ்க்கை மிகவும் எளிமையானது. அவருடைய அறிவு ஆழமானது. Life of Pi படம் பாண்டிச்சேரியிலும் படமாக்கப்பட்டது. அதில் நான் பணியாற்றினேன். அந்தப் படத்தில் நான் ஒரு போலீஸ் கேரக்டரும் செய்தேன். அந்தப் பட மேக்கிங்கின்போது தான் ஹாலிவுட் சினிமாக்களின் டீடெய்லிங் குறித்து தெரிந்துகொண்டேன்.
ரமணா படத்திலும் நான் பணியாற்றினேன். முருகதாஸ் உட்பட சில இயக்குனர்களும் நானும் அதற்கு முன்பு ஒரே அறையில் ஒன்றாகத் தங்கிய அனுபவம் உண்டு. மிகவும் பக்குவப்பட்ட ஒரு மனிதர் விஜயகாந்த் சார். அவருடைய அலுவலகத்தில் எப்போதும் சாப்பாடு பரிமாறப்பட்டுக்கொண்டே இருக்கும். அவரைப் பின்பற்றி இப்போது நானும் என்னால் முடிந்த அளவுக்கு அதைச் செய்கிறேன். விஜய் சாருக்குப் பிறவியிலேயே சில பிளஸ் பாயிண்ட்டுகள் உண்டு. அதிகம் பேச மாட்டார். யாரைப் பற்றியும் கமெண்ட் அடிக்க மாட்டார். வேலையில் அவ்வளவு வேகம் இருக்கும். ஆனால் அதிக நிதானம் இருக்கும். அனைத்தையும் கவனிப்பார்.
விக்ரம் படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்தது. புயல் அறிகுறிகளையும் கடந்து ஷுட்டிங் வெற்றிகரமாக நடந்தது. அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அது முழுக்க முழுக்க இயக்குனரின் படம். கமல் சாரின் ஞானத்துக்கு ஈடுகொடுத்து ஒரு இயக்குனர் படம் எடுப்பது கஷ்டம். அதை லோகேஷ் கனகராஜ் திறமையாகச் செய்தார்.