இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில் விஜய் டிவி அசார் 'கடலை போட ஒரு பொண்ணு வேணும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா ஜித் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் அசார். மன்சூர் அலிகான், நாஞ்சில் சம்பத், உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மன்சூர் அலிகான், "'கடலை போட ஒரு பொண்ணு வேணும்' டைட்டில் நன்றாக இருக்கிறது. இப்படியெல்லாம் டைட்டில் வைத்தால் தான் இளைஞர்கள் சினிமாவுக்கு வருகிறார்கள். நான் ராஜாதிராஜா, குலோத்துங்க சோழன் பட டைட்டில் வைத்த போது, எல்லோரும் திட்டினார்கள் ஆனால் அந்தப்படம் ஜெயித்தது. இப்போதெல்லாம் பெரிய படத்திற்கு தான் கூட்டம் வருகிறது. விஜய் பீஸ்ட்டுக்கு வெயிட் பண்ணுகிறார்கள். அனிருத் சிவகார்த்திகேயன் கலக்குகிறார்கள். பெரிய படமெடுத்தால் தான் மக்கள் பார்க்க வருகிறார்கள். சின்ன படத்திற்கு வருவதில்லை. மத்திய அரசு மக்களிடம் வரி போட்டு எல்லாவற்றையும் பிடுங்கி விடுகிறது. மக்களிடம் பணமில்லை, மக்கள் சந்தோஷமாக இருந்தால் தானே படத்திற்கு வருவார்கள், விஜய்யை ஷூட்டிங்கிலிருந்து வரி ஏய்ப்பு விசாரணை என கூட்டிட்டு போனார்களே அதை யாராவது கேட்டார்களா? நான் மட்டும் தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் இணைந்து போராட வேண்டும், ஹீரோ ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார்கள், இந்த கடலை போட பொண்ணு வேண்டும் ஜெயிக்க வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.