பிரபல பாடகர் எஸ்.பி.பி. செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். அவருடைய மறைவிற்கு இந்திய பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். தாமரைபாக்கத்திலுள்ள அவரது பண்ணையில் நல்லடக்கம் செய்யப்பட்டார் எஸ்.பி.பி.
இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை எஸ்.பி.பி.-க்கு நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, மயில்சாமி, இயக்குனர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் கலந்துகொண்டு பேசினார்கள்.
அப்போது கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, “எஸ்பிபி சாரைப் பற்றி என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லுவானா என்று தெரியவில்லை. சில பேர் மக்களுடைய வாழ்க்கையைச் சந்தோஷப்படுத்துவதற்காகவும், துணையாக இருப்பதற்காகவும் படைக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் எஸ்.பி.பி. சாருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன் என்பதால் அவர்கூடவே வளர்ந்திருக்கிறேன். எனக்கு அவர் இயற்கை மாதிரிதான். வானம், பூமி, காற்று மாதிரி தான் எஸ்.பி.பி. சார். அந்தளவுக்கு எனக்குள் இருப்பவர் எஸ்.பி.பி. சார்.
பல நாட்கள் அவருடைய பாடல்கள் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறோம். இப்போது என் பெண்ணும் அவருடைய பாடல்களை கேட்டுத்தான் தூங்குகிறாள். ஒவ்வொருவரிடமும் பேசும்போது, அவர் இல்லை என்ற சோகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது ஆறவே ஆறாது என நினைக்கிறேன். அவருடைய பாடல்களை இப்போது கேட்கும் போதும், பேசிய விஷயங்களைப் பார்க்கும்போது அவருடைய குரலை விட அவ்வளவு இனிமையாக வாழ்ந்திருக்கிறார்.
என்னுடைய பாக்கியம் கடந்தாண்டு என் படத்தில் ஒரு பாடல் பாடினார். அப்போது அந்த ஸ்டுடியோவில் சாதாரண ஒரு மனிதரைக் கூட அவர் கடந்து போகவில்லை. எப்படியிருக்க என்று கேட்டுப் பேசினார். ஒவ்வொருத்தரையும் அவ்வளவு நேசிக்க முடியுமா என்று தெரியவில்லை. எஸ்.பி.பி. சாரிடமிருந்து சக மனிதரை நேசிக்கும் பழக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். எஸ்.பி.பி. சார் வி ஆல்வேஸ் மிஸ் யூ. என் உயிருள்ளவரை என் உள்ளத்தில் உங்களை வைத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.