இயக்குநர் கே. பாலச்சந்தர் தயாரிப்பில் ரோஜாவனம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ஜெய் ஆகாஷ் . தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஜெய் ஆகாஷை சந்தித்தோம். அப்போது அவரது சினிமா வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “ரோஜாக் கூட்டம் படம் சூப்பர் ஹிட் ஆனதற்குப் பிறகு, நிறைய படங்கள் எனக்கு வந்தது. அந்த நேரத்தில் நான் படம் பண்ணாமல் இருந்ததற்குக் காரணம் என்னைப் பற்றிய பொய்த் தகவல்கள் எல்லாம் க்ளியர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான். நான் டிகிரி முடித்து வந்ததும் மணிரத்னம் என்னை 'அலைபாயுதே' படத்திற்காக அழைத்தார். சுஹாசினி என்னை 'ரோஜா வனம்' படத்திற்கு நான் சரியாக இருப்பேன் என என்னிடம் சொன்னார். அந்த சமயத்தில்தான் தமிழ் எனக்குச் சரியாகப் பேச வராத காரணத்தால் 'அலைபாயுதே' படத்திற்கு தேர்வு செய்யாமல், 'ரோஜா வனம்' படத்தில் இரண்டாவது ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்கள், அப்படித்தான் நான் அந்த படம் பண்ணினேன்.
அப்போதுதான் அந்த ரூமர் உருவானது. அது என்னை ரொம்ப அப்செட் ஆக செய்தது. அதைக் கேட்கும் போதெல்லாம் என்னால் ஒரு குடும்பத்தில் பிரச்சனையும் அந்தப் பெண்ணிற்குக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். யாரோ விஜய்க்கும் அந்தப் பெண்ணிற்கும் பிடிக்காத நபர்கள் இதைச் செய்திருக்கலாம். அது மிகவும் மோசமான ஒன்று. அதில் ஏன் என் பெயரை இழுத்தார்கள் என்று தெரியவில்லை. நான் விஜய்யை அடிக்கடி விமான பயணத்தின்போது பார்த்தால் பேசுவேன், அவர் ஹைதராபாத் வந்தால் சந்திப்பேன், அவர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ அதுபோல ஆகாஷ் அப்படி இல்லை என்று என்னைப் பார்க்கும்போது அவருக்கும் தெரிந்திருக்கும். அந்த ரூமர் யாரோ உருவாக்கியது” என்றார்.