“வியட்நாம் போறிங்களே அந்த நாட்டில் என்னங்க இருக்கு?” இது மனைவி கேட்ட கேள்வி. “உங்க வயசுக்கு ஜாலியா மலேசியா, தாய்லாந்து, பாலி தீவு போகாம அதென்ன வியட்நாம்? அங்கென்ன இருக்கு” என்கிற கேள்வியை கொஞ்சம் வெளிப்படையாகவே கேட்டனர் நெருங்கிய நண்பர்கள்.
இந்த கேள்வியை எதிர்கொண்டபோது எனக்கு வியட்நாம் குறித்து சொல்வதற்கு மூன்று பாய்ன்ட்களே இருந்தன. அது ஒரு பொதுவுடமை தேசம், கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் தேசம். உலக வல்லரசாகவும், உலகத்தின் நாட்டாமையாக தன்னை வெளிப்படுத்திவரும் அமெரிக்காவை போர்க் களத்தில் புறமுதுக்கிட்டு ஓடஓட விரட்டிய தேசம். அமெரிக்கா – வியட்நாம் இடையிலான போர்க்களத்தில் பயத்தில் அலறிக்கொண்டு ஓடிவரும் சிறுமியின் பிம்பம் மட்டுமே மனதில் இருந்தது. இவைகளை மட்டுமே சொல்ல முடிந்தது.
அதேசமயம், கம்யூனிஸ தேசத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் என்ன இருந்துவிடப்போகிறது என்கிற எண்ணம் மனதுக்குள் இருந்தது. 14 நாட்கள் அங்கே இருக்கப்போகிறோம் அங்கே பார்க்க என்ன இருக்கிறது என இணையத்தில் வியட்நாம் குறித்து தேடத்துவங்கினேன்.
ஆசிய கண்டத்தில் தெற்காசியாவில் உள்ள நாடுகளில் ஒன்று வியட்நாம். சோசலிச குடியரசு நாடு. நாட்டின் தலைநகரம் ஹனாய். நாட்டின் மொத்த பரப்பளவு 3,31,689 சதுர கிலோமீட்டர். நாட்டின் மொத்த மக்கள் தொகை தோராயமாக 10 கோடியே 40 லட்சம் சொச்சம். நாட்டின் நிலவியல் அமைப்பு மண்ணுளி பாம்பு போல் இருக்கும். அதாவது நாட்டின் வடக்கு எல்லை பகுதியும், தெற்கு எல்லைப்பகுதியும் மண்ணுளி பாம்பின் தலையைப்போல் பெரியதாக இருக்கும், உடம்பு நீண்டதாக வால் போல் இருக்கும். வியட்நாமின் எல்லைகளாக நாட்டின் கிழக்கு பகுதியில் தென்சீனாக்கடல், வடமேற்கு பகுதியில் லாவேஸ், தென்மேற்கு பகுதியில் கம்போடியா, வடக்கு பகுதியில் சீனா போன்றவை அமைந்துள்ளன.
சீனப் பேரரசின் ஒருப்பகுதியாக சுமார் ஆயிரம் ஆண்டுகள் சீனர்களின் ஆட்சியில் இருந்துவந்தது இன்றைய வியட்நாம். 1802ஆம் ஆண்டு இந்நாட்டை ஆட்சி செய்த பேரரசர் ஜியா லோங்கினால் சூட்டப்பட்ட பெயரே வியட்நாம். நாட்டில் 54 இனக்குழுக்கள் உள்ளன. இதில் வியட்நாமிஸ் என்கிற பெயரில் அழைக்கப்படும் கிங்க் என்கிற சமூகம் 85 சதவிதம், தாய் 2 சதவிதம், மியோங் 1.5 சதவிதம், கிமீர் 1.4 சதவிதம், மோங் 1.4 சதவிதம், நுங் 1 சதவிதம். இத்தனை சமூக குழுமக்கள் இருந்தாலும் இவர்கள் பேசும் மொழி, நாட்டின் அதிகாரபூர்வ மொழி வியட்நாமி மொழி. அடுத்ததாக அலுவல் மொழியாக ஆங்கிலம் வைத்துள்ளனர். பிரெஞ்ச், சீன, கெமர் மொழிகளும் பேசப்படுகின்றன.
வியட்நாமில் பௌத்த மதம் தான் முதன்மையானது. கிருஸ்த்துவர்கள் பெருமளவில் இருந்தாலும் அவர்களும் பௌத்த கொள்கைகளை கடைப்பிடிக்கின்றனர். இஸ்லாமியர்களும் மிக குறைவாக உள்ளனர். அனைவருக்குமான சமமான நாடாக வியட்நாம் இருக்கிறது. பௌத்தர்கள் அதிகமாக இருந்தாலும் அதைவிட அதிகமாக மதமற்றவர்கள் இந்நாட்டில் உள்ளனர்.
வியட்நாமில் உலக பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் எட்டு இருக்கின்றன. அதில் 5 தலங்கள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இடங்களாக உள்ளன. ஹியூ, ஹாலாங் பே, ஹோய், என் மகன் சரணாலயம், Phong Nha-Ke Bang தேசிய பூங்கா, தாங் லாங்கின் இம்பீரியல் சிட்டாடல் – ஹனோய், ஹோ வம்சத்தின் கோட்டை, டிராங் ஆன் லேண்ட்ஸ்கேப் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்கள் இருப்பதை படித்து ஆச்சர்யமாகின. இந்த இடங்கள் குறித்து யூடியுப்பில் அந்த வீடியோக்களை பார்த்தபோது, இயற்கை பகுதிகள் மனதை கொள்ளை கொண்டன. இணையத்தில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் பெரும் வேறுபாடு இருக்குமே என மனதில் தோன்றியது.
என்னய்யா இப்படி நினைக்கற ‘வியட்நாம் தேசத் தந்தையே உலகம் சுற்றும் ஆசையில் இருந்தவர்தானே’ என எப்போதோ படித்தது மூளைக்குள் மின்னலடித்தது. அவர் கட்டமைத்த தேசத்தில் சுற்றுலா தலங்கள் இருக்காதா என்கிற எண்ணமும் வந்தது.
வியட்நாம் தேசத்தில் முதல்நாள் பயணமே அதிரிபுதிரியாய் தொடங்கியது. இரவு விமான பயணம் என்பதால் காலையில் தாமதமாகத்தான் எழுந்தோம். 10 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு சாப்பிடலாம் என ஹோட்டல் வரவேற்பறை மேலாளரிடம் கேட்டபோது, காலையில் மட்டும் தான் ஹோட்டலில் உணவு, மதியம், இரவு கிடையாது என்றார். அவரே விசிட்டிங் கார்டு தந்து இந்தியன் ரெஸ்டாரென்ட் இருக்கு பாருங்க; போங்க என்றார்.
ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது பகலில் முதல் முறையாக ஹனாய் நகரத்தை பார்த்தோம். நகரத்தின் முக்கிய பகுதி. சாலையின் இருபுறமும் நடைபாதையில் நம்மவூர் கையேந்தி பவன்கள் போலவே குட்டி குட்டியாக நற்காலி போடப்பட்டு சாலையோரம் ஹோட்டல்கள் வியாபித்திருந்தன. இரண்டு குச்சிகளை வைத்து நூடூல்ஸ், பச்சை இலைகளை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். இத எப்படி சாப்பிடுவது என நினைத்தபடி விசிட்டிங் கார்டில் இருந்த பெயரை கூகுள் மேப்பில் தட்டியதும் அது வழிகாட்டியது. அது காட்டிய வழியிலேயே சென்று ஹோட்டலை அடைந்தோம்.
ஏதேதோ பெயர்கள் இருந்தன. மூன்று ஆனியன் பராத்தா ஆர்டர் செய்தபோது வந்தவை நம்மவூர் போலி போல் இருந்தது. நம்மவூர் போலியில் இனிப்பு வைத்திருப்பார்கள் இதில் ஆனியன் அரைத்து வைத்திருந்தார்கள் அவ்வளவே. பராத்தாவுக்கு தொட்டுக்க ரவுண்டாக கட் செய்த வெங்காயம், அரை எலும்பிச்சை பழம், இரண்டு பச்சை மிளகாய். எங்கவூர்ல விதவிதமா சாப்பிடறவங்கடா நாங்க, இங்க இதையா தருவிங்க என மனதுக்குள் சபித்தபடி சாப்பிட்டபோது நாக்கு குடிக்க தண்ணீர் கேட்டது. குடிக்க தண்ணீர் கூட வைக்கவில்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. தண்ணீர் கேட்டபோது அதுக்கு தனி ரேட் என்றார் சப்ளையர். சாப்பிட்டு முடித்தபின் பில் வந்தது, வாங்கி பார்த்தபோது மயக்கமே வந்துவிட்டது.
பயணம் தொடரும்...
நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 3