கணவன், குழந்தைகள் என அனைவரும் எதற்கெடுத்தாலும் குறை சொல்லியதால் மனமுடைந்து செய்வதறியாது இருந்த பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
ஒரு பெண் என்னிடம் கவுன்சிலிங்கிற்காக வந்தார். 45 நிமிடங்களாகியும் பேச முடியாமலும், அழுதும் தவிக்கிறார். திருமணம் ஆன பிறகு எதற்கெடுத்தாலும் மனைவியை கணவன் குறை சொல்லியும், பழி போடுவதுமாக இருந்திருக்கிறார். இது காலப்போக்கில் அந்த பெண்ணுடைய குழந்தைகளும் அம்மாவை குறை சொல்லியே இருந்திருக்கிறார்கள். எல்லோத்துக்கும் அம்மா தான் காரணம் என ஒவ்வொன்றுக்கும் குழந்தைகள், இந்த பெண் மீது பழி சுமத்திக்கொண்டே இருக்கிறார்கள். பழி போடுவதையும் மீறி அப்பாவிடம் ஏதாவது கிடைக்க வேண்டுமென்பதற்காக அம்மாவை பற்றி தப்பு தப்பாக சொல்லி அப்பாவை சண்டை போட வைக்கிறார்கள். நாளடைவில், இப்படியே தொடர கணவன் தன் மனைவியிடம் கடந்த ஒன்றரை வருடமாக பேசுவதில்லை. இந்த நிலையில், தன் எதாவது தவறு இருக்கிறதா? நான் என்ன செய்ய வேண்டும்? என்று தான் என்னிடம் வந்தார்.
இந்த விஷயத்தை அவருடைய கணவனை வைத்து தான் பேச வேண்டும் என நினைத்து அவரையும் அழைத்து வரச் சொன்னேன். அந்த பெண்ணும், தன் கணவரை சமாதானப்படுத்திய பின், கோபத்தோடு தான் என்னிடம் வந்தார். தன்னை மட்டுமே டிபெண்ட் வாழ்கிறாள், குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை, அவளுடைய வளர்ப்பு அப்படி என என்னிடம் மீண்டும் தன் மனைவியை குறைசொல்லியே தான் இருந்தார்.
காலையில் இருந்து என்ன என்ன செய்கிறீர்கள் என அந்த பெண்ணிடம் கேட்க ஆரம்பித்தேன். ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது, கணவனை கவனிப்பது என மற்றவர்களை கவனிப்பதற்கான வேலைகளை மட்டுமே தான் செய்து வந்ததாக சொன்னார். அம்மா என்றாலே, குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கு மட்டும் என்ற லேபிளிங் இன்னமும் நிறைய பேர் வீட்டில் இருக்கிறது. கணவன் மற்றவர்கள் முன்பு மனைவிக்கு மரியாதை கொடுத்தால் தான் மற்றவர்களும் கொடுப்பார்கள். இதை சொன்னதற்கு, தன்னால் மாற முடியாது என கணவர் பிடிவாதமாக சொன்னார்.
எந்தெந்த விஷயங்களுக்கெல்லாம் அம்மா மீது குழந்தைகள் உங்களிடம் குறை சொல்கிறார்கள் எனக் கேட்டதற்கு, இரண்டு மூன்று சம்பவங்களை கூறினார். அதாவது, ஒரு பொருளை வாங்குவதற்கு அம்மா முடியாது அல்லது எதாவது விஷயத்துக்கு அம்மா முடியாது என்று சொல்லும்போதெல்லாம் அப்பாவை அணுகியிருக்கிறார்கள். கடைசி வரை அவரது கணவர் தன்னை மாற்றிக்கொள்ளவே விரும்பவில்லை. அடுத்து, அவர்களது குழந்தைகளிடம் பேசினேன். உங்களுக்கு யார் சாப்பாடு, பாடம் சொல்லிக்கொடுப்பது என மற்ற விஷயங்களை யார் செய்தார்கள் எனக் கேட்டதற்கு, அம்மா உடம்பு சரியில்லை என்றாலும் சமைத்துக்கொடுப்பார் எனக் குழந்தைகள் சொன்னார்கள். இது தான் அம்மா செய்த தவறு. தனக்கு உடம்பு சரியில்லை என்றால் அதை சொல்லி ஆக வேண்டும். தனக்கு என்ன வேண்டும் என்பதையே சொல்வதில்லை. நன்றாக படித்த அந்த பெண்ணிடம் உங்களுக்காக ஒரு வேலையை தேடிக் கொள்ளுங்கள். உங்களுக்காக நேரத்தை செலவு செய்த பிறகு, குடும்பத்தை கவனியுங்கள். அப்போது தான் குடும்பத்தை பார்ப்பது எவ்வளவு கஷ்டம் எனக் குழந்தைகளுக்கு புரியும் என அவரிடம் புரியவைத்தேன். ஏதாவது செய்து கொடுக்கவில்லையென்றால் அப்பாவிடம் சொல்லிக்கொடுப்பேன் என்ற குழந்தைகள் அம்மாவை பயத்திலேயே வைத்திருக்கிறார்கள். நான் சொன்னதை குழந்தைகளுக்கு புரிந்தது மாதிரி தான் நடந்துகொண்டார்கள். இதை எந்தளவுக்கு கடைபிடித்தார்கள் என எனக்கு தெரியவில்லை. ஆனால், உங்களுக்கு தைரியம் வர வேண்டும் என அந்த அம்மாவுக்கு அட்வைஸ் செய்தேன். இன்னுமும் அந்த அம்மாவிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவருடைய மெண்டல் ஹெல்த்தை ஸ்ட்ராங்க் செய்ய வேண்டும் என்பதற்கான விஷயத்தை எல்லாம் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு இடத்தில் நோ சொல்ல வேண்டுமென்றால் அந்த இடத்தில் கண்டிப்பாக நோ சொல்லுங்கள் என்று சொன்னேன்.