குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி பார்ப்போம்.
பூர்விகா என்ற பெண்ணுடய வழக்கு இது. பெற்றோர் பார்த்து திருமணம் உறுதி ஆகிறது. வழக்கம் போல திருமண பேச்சில் பையன் வீட்டில் நகை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். பெண்ணின் தந்தை ஆசிரியர். 70 பவுன் நகை போட்டு பெண் வீட்டில் திருமணம் செய்து வைக்கிறார்கள். வழக்கம் போல சில மாமியார்கள் தன் மகனின் அன்பில் பங்கு போடவே மனைவி என்பவள் வருகிறாள் என்று நினைப்பது போலவே பூர்விகா மாமியார் இருக்கிறார். ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை நிம்மதியாக சென்றாலும் மாமியார் அவ்வப்போது கொடுக்கும் இன்னல்கள் அதிகமாகிறது. என் பையனை மயக்காதே என்பதும், நடை உடையை பரிகாசம் செய்வதுமாய் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் பையனுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்து அங்கே இருவரும் செல்கிறார்கள். அங்கே தான் கணவனின் நடவடிக்கை புதுமையாக இருக்கிறது. எங்கு வெளியில் சென்றாலும் பெண்களை இவளுக்கு நேராகவே வர்ணிப்பது, மத்த பெண்ணுடன் ஒப்பிட்டு மனைவியை மட்டமாக பேசுவது என்று இருக்கிறான். இதில் மிகவும் சங்கடமாக உணர்கிறாள் பூர்விகா. இதனிடையே, வெளிநாடு சென்றும் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் மாமியார் மருமகளை குத்தம் சொல்வது, பின்னர் மகன் சென்று அம்மாவை சமாதானம் செய்வது என்றே செல்கிறது. இதற்கிடையில் மனைவி கர்ப்பம் ஆகிறாள். துணைக்கு கணவனே, மனைவியின் பெற்றோரை வரவழைத்து கூட பார்த்துக் கொள்ள வரவைக்கிறான். அவர்களும் ஒன்றரை மாதங்கள் கூட இருக்கிறார்கள். பொறுக்காத மாமியார் தன்னை அழைக்கவில்லை என்று அதற்கும் குற்றச்சாட்டு. இதனால், அவள் தன் பெற்றோருடன் இந்தியா திரும்புகிறாள்.
அதன் பின் கணவனின் போக்கு சரியில்லை. அவளுடன் பேசுவதில்லை, உடன்பாடாக ஆசையாக கூட இல்லை. இடையில் மாமியார் அவளுடைய நாத்தனார்க்கு உரிய மரியாதை செய்யவில்லை என்று பேச்சு வேறு. பூர்விகாவுக்கு பெண் குழந்தை பிறந்து பத்து நாட்கள் கழித்தே பார்க்க வருகிறான் கணவன். பெயர் வைத்து விட்டு உடனேயே கிளம்பி விடுகிறான். அதன் பின்னர் மனைவியிடம் அவ்வளவாக தொடர்பில் இருப்பது இல்லை, அக்கறையும் காட்டுவதில்லை, ஒதுங்கியே இருக்கிறான்.
பெங்களூருக்கு மாற்றலாகி வருகிறான். அவனுடன் பூர்விகா மற்றும் குழந்தைகள் செல்கின்றனர். குழந்தைக்கு மாறு கண் கோளாறு காரணத்தில் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து போகுமாறு இருக்கிறது. சிகிச்சைக்காக ஒரு வாரம் இங்கே தங்கி விடுகிறாள் பூர்விகா. ஆனால் கணவனோ, அவள் நடத்தையில் சந்தேகம் கொள்கிறான். மேலும், தனக்கு மனைவி குழந்தைகள் விட தனது தாய் தான் முக்கியம் என்கிறான். அதன் பின்னர் அடிக்கடி சண்டை வருகிறது. அம்மா வீட்டிற்கு சென்று வருகிறாள். சொந்தக்காரர்கள் அறிவுரை கூறியும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. ஒருமுறை கணவனை சந்தித்து பேசவேண்டும் என சென்று பார்க்கும்போது தான் தெரிகிறது அவன் வீட்டை காலி செய்து விட்டான் என்றும், பார்த்து கொண்டிருந்த பெங்களூர் வேலையிடத்திலும் இல்லை என்று தெரிந்தது. நம்பரும் பிளாக் செய்யப்பட்டிருந்தது. கையில் குழந்தையுடன் சென்னையில் தனியாக தங்கி வருகிறாள். என்னை சந்தித்து எல்லாம் சொல்ல நாங்கள் கேஸ் அப்ளை செய்தோம். தனக்கு கணவன் வேண்டும் என்றும், தன்னுடைய பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்னால் கணவனை விடமுடியாது என்றாள்.
சேர்ந்து வாழ வேண்டும் என்று பெட்டிஷன் போட்டோம். அந்த பையன் ஒருவழியாக அனுமதி வாங்கி விவாகரத்துக்கு பைல் செய்கிறான். ஆனால் மனைவி தயாராக இல்லை. மெயின்டனன்ஸ் பணம் கேட்கிறாள். இப்படி 3- 4 வருடம் செல்ல யாரிடமும் சொல்லாமல் பெற்றோர் அனுமதியோடு அவன் இன்னொரு திருமணத்தை கோயிலில் செய்திருக்கிறான் என்று தெரிய வந்தது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை. கோர்ட்டில் அவளுக்கு மெயின்டனன்ஸ் பணம் கொடுக்க வேண்டும் என்று தீர்வாகிறது. ஆனால், அவன் அதை பொருட்படுத்தவில்லை. அவனை கைது செய்யவேண்டும் என்று கேட்டோம். சட்டத்தையும் தீர்ப்பையும் மதிக்கவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பலாம். அதை அனுப்பிய பின்தான் மெயின்டனன்ஸ் பணம் கொடுக்க ஒத்துக்கொண்டான். நீதிபதியும் ட்ரையல் நடத்த அனுமதி வழங்கினார். அந்த இரண்டாவதாக திருமணம் செய்தவளுக்கு குழந்தை பிறந்திருப்பதை அறிந்த நாங்கள் ஆட்களை வைத்து ரிஜிஸ்டர் அலுவலகம் சென்று திருமணப் பதிவு பேப்பரையும், குழந்தை பிறந்த மருத்துவமனை போய் பிறந்த நாள் சர்டிபிகேட் எடுத்து கொண்டு போய் கோர்ட்டில் சமர்ப்பித்தோம்.
‘சப்போனா அல்லது சாட்சி சம்மன்’ என்று சொல்லக்கூடிய நோட்டீசை அனுப்பி மொத்த கேஸ் ஹிஸ்டரி வாங்கி அவனை நான் க்ராஸ் எக்ஸாமினேஷன் செய்தேன். இதை சற்றும் எதிர்பாராதவன் இறங்கி வந்தான். அவனுக்கு வேறொரு திருமணம் ஆனதை கேள்விப்பட்ட மனைவியும் அவனுடன் வாழப் பிடிக்காமல் உட்கார்ந்து பேசி இறுதியாக குழந்தைக்கு பதினைந்து லட்சம், மனைவிக்கு பதினைந்து லட்சமும், போட்ட சீர் வரிசை, பாத்திரம் எல்லாம் சேர்த்து மொத்தமாக ஐம்பது லட்சம் அந்த பெண்ணிற்கு தந்ததும் மியூச்சுவல் கன்சன்ட் போட்டு விவாகரத்து வழங்கப்பட்டது. தன்னுடன் கணவன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட பெண், கணவனின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் தெரிந்ததும் அந்த உறவை முறித்துக் கொண்டாள். பெண்களின் வாழ்க்கை எப்போதுமே போராட்டம் நிறைந்ததாகவும் இருக்கத்தான் செய்கிறது என்பதை இந்த வழக்கின் வழியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.