16 ஆவது ஐபிஎல் சீசனின் 12 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். ரோஹித் சர்மா 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க இஷான் கிஷன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் வரிசையில் வந்த மும்பை அணி பேட்டர்களில் திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் தவிர்த்து எஞ்சிய வீரரகள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியில் ஜடேஜா 3 விக்கெட்களையும் சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
158 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணியில் தொடக்கமே அதிர்ச்சியாக கான்வே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற பின் வந்த ரஹானே மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். தொடர்ந்து அசத்திய அவர் 27 பந்துகளில் 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ருதுராஜ் பக்கபலமாக இருக்க பின் வந்த ஷிவம் துபே மற்றும் ராயுடுவின் ஆட்டத்தால் சென்னை அணி வெற்றியை ருசித்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களை எடுத்தார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி மூன்று ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணி 2 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளது.