இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடந்த ஐபிஎல் போட்டிகளை, இந்த ஆண்டு வழக்கம்போல் இந்தியாவில், ஏப்ரல் - மே மாதத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது.
இந்தநிலையில், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூர் மற்றும் டெல்லி ஆகிய ஐந்து மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸின் வான்கடே மைதானம், இடம்பெறவில்லை. இதற்கு மஹாராஷ்ட்ரா அரசு இன்னும் அனுமதியளிக்காததே காரணம் என அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அம்மாநில அரசு அனுமதியளித்தால் வான்கடே மைதானத்திலும் போட்டி நடைபெறும் எனக் கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் போட்டிகளின் பிளே-ஆப்ஸ் மற்றும் இறுதிப்போட்டியை, அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் சமீபத்தில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இது இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் கிரிக்கெட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.