12-வது சீசன் ஐ.பி.எல் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் தற்போது ப்ளே ஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டெல்லி அணி கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரின் 4-வது பந்தில் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா பந்தை அடிக்காமல் ரன் எடுக்க முயற்சித்தார். அப்போது பந்துவீச்சாளர் கலீல் அகமது அவரை ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் அப்போது, ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க ஸ்டம்பை மறைத்துக்கொண்டு மிஸ்ரா ஓடினார்.
இதுகுறித்து ஹைதராபாத் அணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை உறுதி செய்த நடுவர்கள் அமித் மிஷ்ராவுக்கு அவுட் கொடுத்தனர். இதற்கு முன்னர், ஐ.பி.எல் தொடரில் முதல் முறையாக 2013-ல் ராஞ்சியில் நடந்த போட்டியில் யூசுப் பதான் இதேபோல் அவுட்டாகினார். இவருக்கு அடுத்து இப்படி அவுட்டானது அமித் மிஸ்ராதான் என்பது குறிப்பித்தக்கது.