மூன்றாவது டெஸ்டில் ஜடேஜா இடத்தில் அக்சர் படேல் தேர்வு!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்கு பதில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தேர்வாகியுள்ளார்.
மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 கிரிக்கெட் போட்டிகளை விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி பல்லிக்கேல் மைதானத்தில் வைத்து வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது. முன்னதாக ஐசிசியின் விதிகளை மீறிய குற்றத்தால் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரும், சர்வதேச டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ரவீந்திர ஜடேஜா மூன்றாவது ஆட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனால், அவரது இடத்தில் பந்துவீச தகுதியான சுழற்பந்து வீச்சாளருக்கான வெற்றிடம் ஏற்பட்டது. அந்த இடத்தை நிரப்ப இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.