இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிரியாவில் நடைபெறும் போரை கண்டித்து கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய மாநில தணிக்கைகுழு உறுப்பினர் முகம்மது ஒலி, ‘’சிரியாவில் ரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் என ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தும் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கொள்ளப்படுபவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் உள்ளது. ஒன்றுமே அறியாத பிஞ்சு குழந்தைகளின் சிதைக்கப்படும் புகைபடங்களை பார்க்கும் போது காண்போரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. உயிர் பயத்தில் குழந்தைகளின் அலறல்களும், அழுகுரல்களும் உள்ளத்தை துளைத்து எடுக்கிறது. அப்பாவி சிரியா மக்களை கொன்று குவித்து வரும் பஸார் அல் அஸ்ஸாத்தையும் அவர்களும் கூட்டு சேர்ந்து சிரியா நாட்டு மக்களை கொள்ளும் ஈரான் மற்றும் ரஷ்யாவையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் ஐ.நா சபை தலையிட்டு உடனடியாக இதற்கு தீர்வு காணவேண்டும்’’ என்றார்.
- பாலாஜி