ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து, அந்தநாடு முழுவதும் தலிபான் வசமாகியுள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், அந்நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே நியூசிலாந்து, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், தமது குடிமக்களை அழைத்து வர விமானங்களை அனுப்பி வந்தன. இந்நிலையில் தற்போது விமான நிலையத்தில் மக்கள் குவிவதைத் தடுக்கும் விதமாக அனைத்து வர்த்தக விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் மட்டுமின்றி, இந்தியா உட்பட பல்வேறு நாட்டுக் குடிமக்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சீனா, தலிபான்களுடன் நட்பு ரீதியான உறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளது. இந்த நிலையில் தலிபான்கள், காபூலில் வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகள், முன்னாள் போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியோர் உள்ளிட்டவர்களைக் குறிவைத்து தலிபான்கள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்களின் நிலை குறித்து உலக அரங்கில் அச்சம் ஏற்பட்டுள்ளது.