அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட இரு நாடுகளும் தங்கள் கைவசம் இருக்கும் ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்தன. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானவுடன் இந்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர முடிவு செய்துள்ளது.
இதனையொட்டி அமெரிக்கா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, தங்கள் நாட்டு இராணுவம் 3,750 செயலில் உள்ள மற்றும் செயல்பாடற்ற அணு ஆயுதங்களைப் பராமரித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கைவசம் 3822 அணு ஆயுதங்களும், 2019 ஆம் ஆண்டு 3805 அணு ஆயுதங்களும் அமெரிக்காவின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
"அணு ஆயுதங்களைக் குறைக்கும் முயற்சிக்கு, நாட்டின் அணு ஆயுத இருப்பு குறித்த வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது முக்கியம்" என நாட்டின் அணு ஆயுத இருப்பை வெளியிட்டது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. 1967 ஆம் ஆண்டு ரஷ்யாவுடனான பனிப்போர் உச்சத்திலிருந்தபோது அமெரிக்கா 31,255 அணு ஆயுதங்களைக் கைவசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.