ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் பின்னர் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலால் இந்த பதட்டம் அதிகமானது. தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் போர் தொடுக்கும் விதமாக பேசி வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் இரு நாடுகளையும், அமைதியை கடைபிடிக்க வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், போர் வேண்டாம் என்பதை வலியுறுத்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் சதுக்கத்தின் அருகே கூடிய மக்கள் ஈரான் - அமெரிக்கா இடையே நிலவும் பதட்டத்தை குறைக்க வேண்டும் எனவும், போர் வேண்டாம் எனவும் கூறி முழக்கங்களை எழுப்பி பேரணி சென்றனர். ”ஈரானுடன் போர் வேண்டாம்... பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.