கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது திருக்கூட்டம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 32 வயது கோவிந்தன். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் மோனிஷா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. கோவிந்தன் கடந்த 5 ஆண்டுகளாக நான்கு சக்கர வாகனம் ஓட்டும் டிரைவராக வேலை செய்துவருகிறார். தற்போது கரோனா பரவல் காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று கீழ்குப்பம் ஆற்றங்கரையோரம் உள்ள அவருக்குச் சொந்தமான வயலில் பயிர் செய்யப்பட்டிருந்த மக்காச்சோளத்தைப் பார்ப்பதற்குச் சென்றுள்ளார்.
அங்கு மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது கை, கால்களில் தீக்காயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் உடனடியாக சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கிருந்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவர்கள் கீழ்குப்பம் பகுதியில் விசாரணை நடத்தி சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஊர் மக்கள் மத்தியில் கோவிந்தன் மின்சாரம் தாக்கி இறந்ததாக வதந்தியைப் பரப்பியுள்ளனர். காவல்துறையும் இதேபோன்று வழக்குப் பதிவுசெய்துவிடுமோ என்று கருதிய அவரது உறவினர்கள், கீழ்குப்பம் அருகே சேலம் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மர்ம மரணத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று கூறினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்கில் முறையாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.