தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை வழிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (06.03.2021) அரியலூர் சாத்தமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்திலிருந்து அரியலூர் வந்த பாரத ஸ்டேட் வங்கியின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 5 கோடி ரூபாய் பணம் இருந்தது. அதனைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் அந்த வாகனத்தையும் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.