நேற்று (30-ஆம் தேதி), விருதுநகர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட நான்கு ஒன்றியங்களிலும் தலைவர் தேர்தல் நடந்தது. அதில், திமுகவும் அதிமுகவும் தலா 2 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. நான்கு ஒன்றியங்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
சாத்தூரில் திமுகவைச் சேர்ந்த நிர்மலா கடற்கரைராஜ் ஒன்றியக்குழுத் தலைவராகவும், ராஜபாளையத்தில் திமுகவைச் சேர்ந்த சிங்கராஜ், ஒன்றியக்குழுத் தலைவராகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுகவும் அதிமுகவும் நரிக்குடி ஒன்றியத்தில் எண்ணிக்கையில் சம அளவில் இருந்தன. காளீஸ்வரியும் (திமுக), பஞ்சவர்ணமும் (அதிமுக) சம அளவில் வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் நடந்தது. அதில், அதிமுகவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் ஒன்றியக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வத்திராயிருப்பு ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த சிந்துமுருகன் மனு தாக்கல் செய்தார். எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், ஒருமனதாக அவர் ஒன்றியக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மொத்தத்தில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக 7 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.