மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே அமைந்துள்ள உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்டது உ.புதுக்கோட்டை கிராமம். இந்தப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் முறையாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதே வேளையில், உ.புதுக்கோட்டை கிராமத்தில் மயான வசதி கூட இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இறந்தவர்களின் உடல்களைப் பொது வெளியிலேயே அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை நீண்ட காலமாகத் தொடர்கிறது.
இத்தகைய சூழலில், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். 50 வயது மதிக்கத்தக்க இவர் தான் வசிக்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தார். இதற்கிடையில், மனோகரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் கடந்த 23 ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு, அவருடைய உடல் ஊர் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அனைவரும் ஒன்றுகூடி இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், உ.புதுக்கோட்டை கிராமத்தில் மயான வசதி இல்லாத காரணத்தால் ஊருக்கு ஒதுக்குப்புறமான பொதுவெளியில் அவருடைய உடலை அடக்கம் செய்ய குழி தோண்டப்பட்டது. இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, அங்கிருந்த ஊர்மக்கள் கொட்டும் மழையிலும் மனோகரனின் உடலைத் தூக்கிக்கொண்டு மயானத்திற்கு வந்தனர். அப்போது, அங்கு பெய்த கனமழையால் மனோகரனின் உடலை அடக்கம் செய்வதற்காகத் தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் கூரை கூட இல்லாத காரணத்தால் ஒரு தார் பாயின் கீழ் மனோகரனின் உடலைப் பாதுகாத்துக்கொண்டு மழை நிற்கும் வரை சுமார் 3 மணி நேரம் காத்துக்கொண்டிருந்தனர். அதன்பிறகு, மழை நின்றதை அடுத்து மனோகரனின் உடலை அடக்கம் செய்தனர்.
இதற்கிடையில், இறந்துபோன மனோகரனின் உடல் மழையால் அவலமடைந்த நிலையில் காணப்பட்டது அங்கிருந்தவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது, அங்கிருந்த ஒருவர் இச்சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்சப்பில் லீக் செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உ.புதுக்கோட்டை கிராமத்திற்குப் பொது மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.