பாலியல் குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது லஞ்சம் வாங்கியதாக சென்னையில் காவல் ஆய்வாளர்கள் இரண்டு பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட், சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோரின் வீடுகளில் காலை 09.00 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள சாம் வின்சென்ட்டின் வீட்டிலும், மேடவாக்கம் அருகே உள்ள சரவணன் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. இவ்விரு காவல் ஆய்வாளர்களும் கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை காவல்துறையின் பாலியல் குற்றப்பிரிவில் பணியாற்றியபோது, பாலியல் தொழிலில் ஈடுபடுவோரிடம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றன.
குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சாம் வின்சென்ட், சரவணன் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஊழல் ஒழிப்புச்சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குகளின் அடிப்படையில் தான் தற்போது இருவரது வீடுகளிலும் சோதனை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சாம் வின்சென்ட் வீட்டில் இருந்து ஆவணங்களையும், மற்றொரு காவல் ஆய்வாளர் சரவணன் வீட்டில் ஆவணங்களையும், ரூபாய் 2.50 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.