தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் 5,529 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நேற்று முன்தினம் (21/05/2022) நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதன்படி, தேர்வர்கள் அனைவரும் தங்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வு நாளன்று காலை 09.00 மணிக்கு முன்னதாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு எழுத வருபவர்களை அனுமதித்து வந்தனர். இந்த நிலையில், காலை 09.00 மணிக்கு மேல் காலதாமதமாக வந்தவர்களை அதிகாரிகள் தேர்வு எழுத உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் நீண்ட தூரம் வெளியூர்களில் இருந்து பயணம் செய்து வருகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி இல்லை. அதனால் கால தாமதமாகி விட்டது. எனவே எங்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் நேரக் கட்டுப்பாட்டை மீறி அனுமதிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, தேர்வு எழுத வந்த சுமார் 11 பேர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோசனை காவல் நிலைய காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தருவதாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதியளித்தனர்.
போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து காவல்துறையினர் தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்து பேசியபோது அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து காலதாமதமாக தேர்வு எழுத வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.