தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பின் பின்விளைவாக கருப்பு பூஞ்சை எனும் நோயும் பரவிவருகிறது. இதற்கான மருத்துவ நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், கோவையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேருக்கு கண் பார்வை பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் கோவை மாவட்டத்தில் இதுவரை 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை போயுள்ளதாக கோவை மாவட்ட அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். தாமதமாக வந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே வந்திருந்தால் பார்வை இழப்பைத் தவிர்த்திருக்கலாம் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 113 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.