உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் உளுந்து உள்ளிட்ட பல பயிர்கள் நாசமாகிவிட்டது. உளுந்துக்கு மட்டும் கிராம நிர்வாக அலுவலர் மூலம் நிவாரணத் தொகை கோரி விண்ணப்பம் பெறப்பட்டது. மற்ற பயிர்களுக்கு விண்ணப்பம் பெறப்படவில்லை. இருப்பினும், உளுந்துக்கு இன்றுவரை நிவாரணம் வழங்கவில்லை.
உளுந்து மற்றும் அனைத்து சேதமடைந்த பயிர்களையும் கணக்கிட்டு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். உளுந்தூர்பேட்டை தொகுதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகை தொடர்ந்து வருடக்கணக்கில் செலுத்திவரும் விவசாயிகளுக்கும் இன்றுவரை காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. அவற்றையும் உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரி 01.02.2021 காலை 11 மணிக்கு உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். வெங்கடேசன் தலைமையில், தொகுதி செயலாளர் T.கலியமூர்த்தி முன்னிலையில், ஊர்வலமாகச் சென்று சட்டமன்ற உறுப்பினர் இரா. குமரகுருவை இல்லத்தில் சந்தித்து மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் மகாசபை, அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக நிவாரணத் தொகை வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளது என சி.பி.ஐ.எம்.எல். தொகுதி செயலாளர் கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.