கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ’படைப்பாளன்’படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது.
விழாவில், எஸ்.திருநாவுக்கரசர் எம்.பி., கலைப்புலி எஸ் தாணு, திருச்சி வேலுச்சாமி, இயக்குநர் சீனு ராமசாமி, பாடலாசிரியர் சினேகன், நடிகர் மனோபாலா, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எஸ்.திருநாவுக்கரசர் விழாவில் பேசியபோது, ‘’ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நிறையபேர் மகிழ்ச்சியோடு வந்து அமர்வார்கள். நேரம் ஆனதும் எப்படா முடியும் என்று தோன்றும். எனக்கு சினிமாவில் சில அனுபவம் உண்டு. சில படங்களில் தயாரிக்க நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. இந்தப்படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும்.
பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார். அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான். பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். ஆனால் பிரபுராஜா மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார். படத்தின் இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்களை கவிஞர்கள் நன்றாக எழுதி இருக்கிறார்கள். கேமராமேன் சூப்பரா பண்ணிருக்கார். கதையின் கருவும் ரொம்ப சிறப்பாக இருக்கு. அது கரண்ட்ல இருக்குற விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.
சிலபேருக்குத் தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் படம் நல்லா வரும். இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதாரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும். அதனால் இந்த விசயத்தை கல்சட் பண்ணலாம். சினிமா நிறையபேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக் கூடிய தொழில் இது. மற்றபடி என் தம்பி பிரபுவால் எல்லாம் முடியும். உன்னால் முடியும் தம்பி’’ என்றார்.