
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அ.தி.மு.க அரசு மேலும் வேகம் காட்டவேண்டுமென அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான த.மா.கா கூறியுள்ளது.
த.மா.கா இளைஞர் அணி மாநிலத் தலைவர் ஈரோடு யுவராஜா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், "இந்திய நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்க வேண்டி, கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. தற்போது, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலும் பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனாவை வேகமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்று தமிழக எதிர்க்கட்சிகள் பாராட்டிவந்தன. ஆனால், தற்போது கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், கேரள அரசு அங்கு கரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கேரளாவில், சமூகப் பரவல் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வாழ்வாதாரம் வேண்டி வரக்கூடிய மக்கள் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையால் கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதுடன், இறப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நமது தமிழகத்தில் அதிக பரவல் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக வேகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என த.மா.கா இளைஞரணி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.