நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். பத்தாண்டுகள் ஆகியும் அந்த வழக்கின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழகத்தின் முக்கிய கொலை குற்றவாளிகள், வெவ்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து கேட்டறிய சி.பி.சி.ஐ.டி இயக்குநர் ஷகில் அக்தர் இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஷகில் அக்தர், "ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னர் தான் முழு விபரங்களை தெரிவிக்க முடியும். அதற்கு முன்பாக நான் எதையும் கூற முடியாது. இந்த வழக்கில் 10 ஆண்டுகளாக என்ன நடந்தது என்பதை நான் கூற முடியாது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய எல்லா ஏற்பாடுகளும் எங்களுக்கு நல்ல முறையில் செய்து தந்துள்ளனர். விசாரணை தொடர்பான எந்த விபரங்களையும் தற்போது தெரிவிக்க முடியாது" என்றார்.
பின்னர் அங்கிருந்து திருவெறும்பூர் காவல் நிலையம் சென்ற டி.ஜி.பி அங்கு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த வழக்கின் விசாரணை நிலை, வேறு யாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும், உண்மை கண்டறியும் சோதனை யாருக்காவது மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து அவர் ஆலோசனை மேற்கொள்வதாகவும், டி.ஜி.பியின் வருகையால் இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.