உள்ளாட்சி தேர்தலுக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் தொடரப்பட்ட மனுவுக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997- ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய தமிழகம் கட்சி, 2011, 2014, 2016- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. அதுபோல, உள்ளாட்சி தேர்தலிலும் தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் அளித்த விண்ணப்பத்தை மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 3- ஆம் தேதி நிராகரித்தது.
தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்து மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தொலைக்காட்சி சின்னத்தை ஒதுக்க உத்தரவிடக்கோரி அக்கட்சியின் துணைத் தலைவரான எஸ்.செல்லதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, பிப்ரவரி 4- ஆம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.