தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, 15 இடங்கள் கேட்டு விருப்ப பட்டியலைக் கொடுத்துள்ளதாகவும், அதில் 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என விசிக கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் காங்கிரஸ் 30 தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும், அதில் 24 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. திமுகவைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகளுக்கு 54 தொகுதிகளும், மீதமுள்ள 180 தொகுதிகளில் தாங்களே போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று (04.03.2021) சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் இந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில் பங்குபெற்று ஆலோசனை நடத்திய நிலையில், ஆலோசனைக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், “திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. நல்ல முடிவு எடுக்கப்பட்டு, திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று மாலைக்குள் நல்ல முடிவு வெளியாகும்” என்றார்.