கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நெடுங்குளம் கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு ரேஷன் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதில் அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு, கோதுமை, ரவை என அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களை மாதம்தோறும் பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கி வர வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக மேற்படி பொருட்கள் இருப்பு இல்லை என்று குடும்ப அட்டைதாரர்களிடம் கடையின் விற்பனையாளர் தொடர்ந்து கூறிவந்துள்ளார்.
ஆனால் பொருட்கள் அனைத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக அவர்களின் செல்ஃபோனுக்கு அவ்வப்போது குறுந்தகவல்கள் மட்டும் வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள், நேற்று (23.11.2021) காலை அந்த ரேஷன் கடை விற்பனையாளரிடம் சென்று “பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக எங்கள் செல்ஃபோனுக்குக் குறுஞ்செய்தி மட்டும் வருகிறது. ஆனால் நாங்கள் பொருட்கள் எதுவும் உங்களிடம் வாங்கவில்லை, நீங்களும் கொடுக்கவில்லை” என்று நியாயம் கேட்டனர். இதனால் விற்பனையாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமுற்ற பொதுமக்கள் ரேஷன் கடையை இழுத்து மூடி பூட்டிவிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, “உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து பொருட்களும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர். ரேஷன் கடைக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை, மற்ற நாட்களில் ரேஷன் கடை திறந்திருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. அதன்படி எந்த விற்பனையாளர்களும் தங்கள் கடைகளைத் திறந்து வைப்பதில்லை. இதுபோன்ற நிலைதான் தமிழ்நாட்டின் பெரும்பாலான ரேஷன் கடைகளில் உள்ளது. அரசு உத்தரவைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு தங்கள் இஷ்டம் போல ரேஷன் கடையை நடத்துகிறார்கள் அதன் விற்பனையாளர்கள் என்பது குடும்ப அட்டைதாரர்கள் கூறும் குற்றச்சாட்டு.