பயிற்சி முகாம் பார்க்கப் போன இடத்தில் அரசுப் பள்ளியைப் பார்த்து வியந்த அதிகாரி தலைமை ஆசிரியரைத் தேடிச் சென்று பாராட்டினார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நேற்று(28.82022) மாவட்டம் முழுவதும் நடந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்களை பார்வையிடச் சென்றார். அந்தவகையில் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த குருவளமைய ஆசிரியர் பயிற்சியை பார்வையிடச் சென்ற முதன்மை கல்வி அலுவலர் சில நிமிடங்கள் அப்படியே வியந்து நின்றார். அந்த பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒரு வகுப்பறையில் நடந்தது. அந்த வகுப்பறை நட்சத்திர விடுதி போல இருப்பதைப் பார்த்து தான் வியந்து நின்றார்.
இதனைத் தொடர்ந்து மற்ற வகுப்பறைகளையும் பார்த்த முதன்மைக் கல்வி அலுவலர், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணி எங்கே இருக்கிறார் என கேட்க, அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியரங்கில் இருக்கிறார் என்று கூறியுள்ளனர். இதனை கேட்ட முதன்மை கலவி அலுவலர், உடனே ஜோதிமணியை தேடிச் சென்று அங்கேயே அவருக்கு சால்வை அணிவித்து, அரசுப் பள்ளியை இப்படி எல்லாம் வைத்திருக்க முடியுமா? என்று வியந்து பாராட்டியதுடன் மீண்டும் ஒரு முறை பள்ளிக்கு வருகிறேன் என்று கூறிச் சென்றார்.