திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுகவில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறார்கள்
.
இந்த நிலையில்தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, சிவகிரிபட்டி வேளாண்மை பொறியியல் பணி கூட்டுறவு மைய நிர்வாக குழு உறுப்பினருக்கான தேர்தலுக்கு இரு அணிகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் வருகிற ஜனவரி 2-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் திமுகவில் இருவர் போட்டிபோட மனுதாக்கல் செய்தும் இறுதியில் வாபஸ் வாங்கி விட்டனர்.
வெள்ளிக்கிழமை வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதி பட்டியல் ஒட்டும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் தான் வேட்பு மனு பரிசீலனையில் அதிகாரிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளரான பழனி நகரச் செயலாளர் முருகானந்தத்தின் ஆதரவாளர்களும், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆதரவாளர்களான மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன் ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் இருதரப்பினரும் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். இந்த விஷயம் காக்கிகளின் காதுக்கு எட்டவே உடனடியாக ஸ்பாட்டுக்கு விரைந்து, இன்னாள் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனால் வேட்பு மனு பரிசீலனையில் இறுதிக்கட்ட பட்டியலையும் அதிகாரிகள் ஒட்டாமல் போய்விட்டனர். இப்படி ஆளுங்கட்சிக்குள்ளையே இரு அணிகளும் மோதிக்கொண்ட சம்பவம் பழனி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.