முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில், திரைப்படங்களை மிஞ்சும் வகையிலான இந்த வழக்கில் வேகமும், விறுவிறுப்பும் ஏற்பட்டுள்ளது. வழக்கின் தொடர்ச்சியாக கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்திலிருந்து தகவல் கசிகின்றது.
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப் பெண்மணி மாரியம்மாள் உட்பட மூவரின் கொலைகள் தமிழகத்தையே அதிர வைத்த நிலையில், வழக்கின் திருப்பமாக ஸ்கார்பியோ காரால் சிக்கிய முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், குற்றவாளி தான் மட்டுமல்லாது கொலைக்காகக் கூலிப்படையை ஏவி விட்டதையும் "நக்கீரன்", அவ்வப்போது தொடர்ச்சியாகப் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர்களை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை நெல்லை மணிமுத்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் புதைத்து வைத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்ததாகவும், அதனை தனிப்படையினர் மீட்டதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதே வேளையில், தற்பொழுது தான் ஆயுதங்களை மீட்க காவல்துறையினர் ஆற்றங்கரைக்கு வரவுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாக, ஒட்டுமொத்த நெல்லை ஊடகத்தினர் அனைவரும் அங்கு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகிறது.