Skip to main content

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாற்றில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Published on 30/08/2020 | Edited on 30/08/2020

 

NELLAI DISTRICT SERVALARU, PAPANASAM, MANIMUTHARU WATER OPEN CM

நெல்லை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழூள்ள பயிர்களை காக்கவும் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 கால்வாய்களின் கீழுள்ள வாழை பயிர்களைக் காக்கவும், குடிநீர் தேவைகளுக்காகவும், சிறப்பு நிகழ்வாக, 01/09/2020 முதல் 15/09/2020 வரை 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1400 க.அடி/விநாடி வீதமும் மற்றும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12500 ஏக்கர்) மற்றும் கோடகன் கால்வாய் (6000 ஏக்கர்) ஆகியவைகளின் கீழூள்ள 24090 ஏக்கரில் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளில் பகுதியாக கார்பருவ சாகுபடியில் பயிரிடப்பட்ட பயிர்களை காக்கும் பொருட்டும், சிறப்பு நிகழ்வாக 16/09/2020 முதல் 31/10/2020 வரை 46 நாட்களுக்கு நாளொன்றுக்கு 800 க.அடி/ விநாடி வீதமும் ஆக மொத்தம் 4993.92 மி.கன அடிக்கு மிகாமல், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

 

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டங்களிலுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்திச் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்