நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் 19-ந்தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால், 2 தொகுதிகளிலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வாக்காளர்களின் 'பல்ஸ்'பார்த்து, பிரச்சாரம் மேற்கொண்டு சித்து வேலைகளை ஆளுங்கட்சி இப்போது ஆரம்பித்துவிட்டன.
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். விக்கிரவாண்டியில் பாமக சப்போர்ட் இருப்பதால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என நம்பும் அதிமுக, நாங்குநேரியில் கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறது.
அக்டோபர் 14-ந்தேதி எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போதும், 15-ந்தேதி ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யும்போது, கூட்டத்தை சேர்ப்பதற்காக ஆங்காங்கே குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் அதிமுகவினர்.
குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார வேனில் நின்று பேசும்போது அதிக கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக அவர் பேசும் இடங்களிலும் எல்லாம் கவர்ச்சி ஆடை அணிந்த பெண் கலைஞர்கள் 'குத்தாட்டம்' ஆடினர். ஆண்களை இந்த குத்தாட்டம் வெகுவாக கவர்ந்தாலும், பெண் வாக்காளர்களை முகம் சுழிக்க வைத்தது.
சில இடங்களில் பிரச்சார வேனையே மேடையாக்கி அதில் எம்.ஜி.ஆர். வேடமிட்ட கலைஞர்கள் 'புதிய வானம், புதிய பூமி....' என்ற பாடலுக்கு நடனமாடினர். எனினும் கவர்ச்சி ஆடை பெண்களின் "சிறுக்கி சிறுக்கி மக சீனா தானா டோய்..." பாடலுக்கு ஆடிய ஆட்டத்திற்கு சேர்ந்த கூட்டம், எம்ஜிஆரின் புதிய வானத்திற்கு கிடைக்கவில்லை.
"கிராமத்தில் திருவிழா நடத்தும்போது பாட்டுக் கச்சேரி நடத்துவதற்கும், விளையாட்டு போட்டி நடத்துவதற்கும் பர்மிஷன் வாங்க நம்மளை டிஎஸ்பி ஆபிசுக்கும், ஸ்டேசனுக்கும் நடையாய் நடக்க வைக்கிறாங்கப்பா. அதிலும் சாதிப்பாட்டு பாடக்கூடாது, ஆபாச நடனம் கூடாதுன்னு கண்டிசன் விதிக்கிறாங்க. ஆனா இப்ப இங்க நடத்துற குத்தாட்டம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்குது... இந்த சட்ட திட்டம் எல்லாம் சர்க்காருக்கு பொருந்தாது போல..." என்று தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறிவிட்டபடி நடையை கட்டினார் பெரியவர் ஒருவர்.
நாங்குநேரியில் கவர்ச்சி ஆடை அணிந்த பெண்களின் ஆட்டம் என்றால், விக்கிரவாண்டியில் குத்தாட்டம், அதுவும் அமைச்சரின் குத்தாட்டம். மக்கள் சோப்பு போட்டு குளித்த நீர் நொய்யல் ஆற்றில் கலந்ததால், நுரை ஏற்பட்டது என்று புதிய விளக்கம் அளித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தில் வாக்கு சேகரிக்கும்போது, பேண்டு வாத்தியத்திற்கு ஈடாக குத்தாட்டம் ஆடி அங்கிருந்த ஆடியன்ஸை அசர வைத்தார்.