சிதம்பரத்தில் கடந்த ஆண்டு தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோயில் வழக்கறிஞர் சந்திரசேகர் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணமே நடைபெறவில்லை என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பொய்யான குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் ரவி விமர்சித்திருந்தார். மேலும் திருமணம் நடைபெறாதபோது தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இரு விரல் பரிசோதனை நடைபெற்றதாக கூறியிருந்தார்.
இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு சமூகநல அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆனந்த் இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிதம்பரத்திற்கு வருகை தந்தார். தீட்சிதர்கள் மற்றும் திருமணம் செய்து கொண்ட தீட்சிதர் குழந்தைகள், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்றும் அவர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறவில்லை. ஆனால், போலீசார் கட்டாயப்படுத்தியதால் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இதற்கு தீட்சிதர்கள், அவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டாண்டுக் காலமாக குழந்தை திருமணம் செய்து வருகிறார்கள் என சிதம்பரம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தை திருமணம் செய்து வருகிறார்கள் என்றும் இதனை விசாரணை மேற்கொண்ட தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் குழந்தைகளை போலீசார் கட்டாயப்படுத்தியதால் திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள் எனக் கூறியுள்ளது முற்றிலும் தவறானது என்றும் எனவே தவறான கருத்தை கூறி தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் தமிழக ஆளுநர் மீது குடியரசு தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தீட்சிதர்கள், அவர்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து குழந்தை திருமணம் செய்து வருகிறார்கள் என்பதையும் ஆளுநரின் பொய்யான குற்றச்சாட்டையும் நிரூபிக்கும் வகையில் குழந்தை திருமணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.