மெஜாரிட்டி இல்லாத ஆட்சி உடனே அகற்ற கோரி
டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம்
மெஜாரிட்டி இல்லாத நிலையில் தமிழக அரசை கலைக்ககோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அதிமுக (அம்மா, புரட்சி தலைவி அம்மா) கட்சியில் நடந்து வந்த பிரச்னைகள் முடிவுற்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இணைந்ததை அடுத்து, தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி 19 எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும், எடப்பாடி அரசை கலைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத, மைனாரிட்டி ஆட்சி நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஜனநாயகத்துக்கு விரோதமாக குதிரை பேரம் நடக்கிறது. ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில் ஆட்சியை கலைக்காவிட்டால், இன்று கவர்னர் மாளிகையில் உண்ணாவிரதத்தை தொடருவேன் என்றார். இன்று கவர்னர் சென்னைக்கு வரும் வேளையில் டிராபிக் ராமசாமி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.