சேலம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு, பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக 12 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27.12.2019ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 8 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு 30.12.2019ம் தேதியும் தேர்தல் நடந்தது.
சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவி, 385 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, 3597 கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 4299 பதவிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களிலும் சேர்த்து சராசரியாக 81.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய இரு பதவிகளுக்கும் கட்சிகள் அடிப்படையில் தேர்தல் நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் வீதம் மொத்தம் 20 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டன. அனைத்து மையங்களிலும் வியாழக்கிழமை (ஜன. 2, 2020) காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஒவ்வொரு வாக்காளரும் நான்கு பதவிகளுக்கு வாக்களித்து இருப்பதால், நான்கு வண்ண வாக்குச்சீட்டுகளையும் தனித்தனியாக பிரித்தல், வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து வாக்கு எண்ணும் மைய ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதால், அனைத்து மையங்களிலும் தாமதமாக காலை 11.00 மணிக்கு மேல்தான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டாலும்கூட, வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அறிவிப்பதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏனோ தாமதம் செய்தனர். இதனால் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில், இரவு 11.00 மணி வரையில் வெற்றி பெற்ற 129 வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. அதன்படி, 5000 ஓட்டு கவுன்சிலர் எனப்படும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டதில் அதிமுக 60 இடங்களும், திமுக 30 இடங்களும், பாமக 20 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 288 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மொத்தமுள்ள 29 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இரவு 10.00 மணி நிலவரப்படி, பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 24வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த தங்கமணி 17939 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 8வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா 18453 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக வெற்றி சான்றிதழ் வழங்கப்படவில்லை. நீண்ட நேரமாக வாக்கு எண்ணும் மைய வளாகத்திலேயே காத்திருந்தனர். பின்னர் தேர்தல் அதிகாரிகள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வெற்றி சான்றிதழை பெறாதவர்கள், மறுநாள் (அதாவது இன்று, ஜன. 3) காலையில் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் பெற்றுக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை அதிகாலை 02.00 மணிக்குப் பிறகும் தொடர்ந்து நடந்து வந்தது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் இறுதி நிலவரம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்குள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.