தேன்கனிக்கோட்டை அருகே, ராகி தானியத்திற்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி, யானை தாக்கியதில் பரிதாபமாக பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 60 யானைகள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பேவநத்தம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 60 யானைகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து பேவநத்தம், பாலேகுளி, ஊடேதுர்கம், சின்னட்டி, மேலகவுண்டனூர், திம்மசந்திரம், லட்சுமிபுரம், கிரியனபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுற்றித் திரிகின்றன.
யானை கூட்டம் திங்கள்கிழமை இரவு (06.01.2020) கிராமங்களில் விளைநிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த ராகி, சோளம், அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்தன. மேலும், ஆலள்ளி காட்டில் முகாமிட்டிருந்த பத்து யானைகள், அப்பகுதியில் அறுவடை செய்து குவித்து வைத்திருந்த ராகி போர்களை தின்று நாசம் செய்தன.
இந்த நிலையில் நேற்று (06.01.2020) இரவு ஆலள்ளி, மரகட்டா, சாப்பரானப்பள்ளி கிராமங்களில் ராகி வயல்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாப்பரானப்பள்ளியைச் சேர்ந்த சுரேஷ் (34) என்பவர் அறுவடை செய்து குவித்து வைத்துள்ள ராகி தானியங்களை பாதுகாக்க காவலுக்கு சென்றுள்ளார்.
வனத்துறையினர் யானைகளை விரட்டியபோது, அவை சுரேஷ் நிலத்தை நோக்கி வந்தன. இதைப் பார்த்த அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது கல் தடுக்கி கீழே விழுந்தார். அவர் சுதாரித்து எழுவதற்குள் அவரை நெருங்கிய ஒரு யானை, தும்பிக்கையால் தூக்கி பந்தாடியது. காலால் மிதித்தது.
யானை தாக்கியதில் சுரேஷூக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து சுரேஷ் அருகில் இருந்த யானைகளை அங்கிருந்து விரட்டியடித்தனர். சுரேஷை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரேஷின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வனத்துறையினரைக் கண்டித்து அங்குள்ள சோதனைச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை (ஜன. 7) திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த சுரேஷ் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சுரேஷின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முகாமிட்டுள்ள யானைகளை கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்டிவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, மறியலைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.