இ.பி.எஸ். தீர்மானம் நிறைவேற்றாவிட்டால்...? -பண்ருட்டி தி.வேல்முருகன்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சர்கள் கூடி 'கட்சிப் பதவிகளுக்கு தினகரன் செய்த நியமனங்கள் செல்லாது' என்று நிறைவேற்றிய தீர்மானம், அதைத் தொடர்ந்து 'நான் நடவடிக்கை எடுத்தால் ஆட்சி களையும்' என்ற தினகரனின் செய்தியாளர் சந்திப்பு, 'சசிகலா குடும்பத்தை நீக்கினால் தான் இணைப்பு சாத்தியம்' என்ற ஓபிஎஸ் அணியின் முடிவு... இப்படி அதிமுகவில் நடக்கும் அமளிகள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகனிடம் கேட்டோம்...
முழுக்க முழுக்க இவர்கள் அடித்த கொள்ளையை காப்பாற்றிக் கொள்வதற்காக, இவர்கள் செய்த ஊழலை மறைப்பதற்காக பாஜக போட்டுக்கொடுக்கிற திட்டத்தை நிறைவேற்றுகிறவர்களாக ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.சும் செயல்படுகிறார்கள். உள்துறை அமைச்சர் வேலுமணி பினாமி வீட்டில் ரெய்டு நடத்தினார்கள், ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இன்று இந்த தீர்மானம் போடவில்லை என்றால் இதே போன்று மற்றவர்களையும் அச்சுறுத்துவார்கள். இரு அணியும் ஒன்றாக இருக்க வேண்டும், பாஜகவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும், அதற்கு இடையூறாக இருக்கக் கூடிய சசிகலா, தினகரனை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று எல்லா திட்டங்களையும், நகர்வுகளையும் செய்வது பாஜகதான்.
பாஜகவின் செயல் திட்டத்தை, செயலாற்றக் கூடியவர்களாகத்தான் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.சும் இருக்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்காக, சம்பாதித்த பணத்தையும், சொத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் வரும் தேர்தலில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.க்கும் மற்றவர்களுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு.
-வே.ராஜவேல்