கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், இன்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ''டி.ஐ.ஜி விஜயகுமார் நம்முடன் உயிரோடு இல்லை என்ற செய்தி நிச்சயமாக நம் அனைவருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதே காவல்துறையில் நானும் ஒன்பது ஆண்டுகாலம் பணியாற்றினேன் என்பதால் எனக்கு இன்னும் துக்கம் அதிகமாக இருக்கிறது. காரணம் விஜயகுமாரை பொறுத்தவரை இந்த பகுதியில் இருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள், பாஜக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் என அனைவருக்குமே நல்ல அதிகாரியாக இருந்ததால் அவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.
நார்த் பகுதிகளில் மட்டுமே காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்து கொள்வதை பார்த்துள்ளேன். ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக இதைப் பார்க்கிறேன். இதற்கு காரணம் ஆயிரம் இருந்தாலும் இரண்டு பொதுப்படையான காரணம் இருக்கிறது. காவல்துறையில் இருக்கக்கூடிய பணி அழுத்தம். காவல்துறையில் குறிப்பாக அடிமட்டத்தில் கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள், அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர், ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் இந்த கேட்டகிரியில் அவர்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தம் என்பது எந்த ஒரு துறையிலும் இல்லாத உச்சக்கட்ட அழுத்தம் இருக்கிறது. அதற்கு மேலே அதிகாரிகள், இன்ஸ்பெக்டர், டி.ஐ.ஜி, ஐ.ஜி இவர்களுடைய அழுத்தம் என்பது அட்மினிஸ்ட்ரேடிவ் மன அழுத்தம். ஒரு அரசியல் கட்சி வரும்பொழுது ஒரு மன அழுத்தம் வரும். எந்த ஒரு வடிகாலும் இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தாண்டி வேலை செய்து கொண்டு இருப்பார்கள். காவல்துறையின் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
போர்க்கால அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் தமிழகத்தில் மொத்தமாக காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆயிரக்கணக்கான சகோதரர்கள் பந்தோபஸ்த் பணிக்கு வருகிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு டாய்லெட் வசதி இல்லை. அதை எல்லாம் கொண்டு வர வேண்டும். குடிக்கின்ற தண்ணீரை எல்லா இடத்திலும் வைக்க வேண்டும். இன்னொன்று கம்பல்சரி வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை கொடுக்க வேண்டும். கர்நாடகாவில் நான் பணிபுரியும் போது இதை ஃபாலோவ் செய்தோம். விடுப்பு எடுத்தால் தான் அவர்கள் வேலை செய்ய முடியும். அவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை 10 நாட்கள் அல்லது 15 நாட்கள் விடுமுறை கொடுக்க வேண்டும். நான் காவல்துறையில் பணியாற்றிய ஒன்பது வருடத்தில் மொத்தமாக 20 நாட்களுக்கும் கீழ் தான் விடுமுறை எடுத்திருப்பேன். அப்படி இருக்கும் பொழுது எப்படி மன அழுத்தத்தை சமாளித்து மக்களுக்குப் பணி செய்வார்கள்'' என்றார்.