Skip to main content

கிடைத்ததா கூடுதல் தொகுதிகள்? - விசிகவுடன் கையெழுத்தான ஒப்பந்தம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 How many seats for vck?-Signed agreement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடத்தி வரும் நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்திப்பு மேற்கொண்டார்.  தி.மு.க-வி.சி.க கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவு மற்றும் ஒப்பந்தம் கையெழுத்து தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

வி.சி.க மட்டுமல்லாது ம.தி.மு.கவுடனும் இன்று தொகுதிப் பங்கீடு கையொப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அண்ணா அறிவாலயம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக உடனான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, மதிமுகவுக்கு ஒரு தொகுதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வந்த விசிக தலைவர் திருமாவளவன் தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, விசிகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தமுறையும் விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய (08/03/2024) நிலவரப்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட்- 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் -2 தொகுதி, ஐ.யூ.எம்.எல்- 1 தொகுதி, கொ.ம.தே.க-1 தொகுதி, மதிமுக-1 தொகுதி, விசிக-2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ்-திமுக இடையே தற்போது வரை இறுதி பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

சார்ந்த செய்திகள்