வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் அதிரடியாக 215 ரூபாய் உயர்ந்து, நடப்பு மாதத்தில் 1551.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர், வணிக நோக்கில் ஹோட்டல், கடைகளில் பயன்படுத்தப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர்களின் விலைகள் மாதம்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தி, உள்நாட்டில் நிலவும் சந்தை தேவை, உற்பத்தித் திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் விலை நிர்ணயித்தின் போது கருத்தில் கொள்ளப்படும்.
இந்நிலையில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் கடந்த ஜனவரி மாதம் என்ன விலையோ, அதே விலையே நடப்பு பிப்ரவரி மாதத்திலும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முக்கிய நகரங்களில் இதன் விலையில் சற்று வித்தியாசம் காணப்படும்.
அதன்படி, சென்னை- 734 ரூபாய், மும்பை- 684.50 ரூபாய், டெல்லி- 714 ரூபாய், கொல்கத்தா- 747 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 752 ரூபாயாக நீடிக்கிறது.
அதேநேரம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை கடந்த மாதத்தைக் காட்டிலும் அதிரடியாக 215 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சேலத்தில் இந்த வகை சிலிண்டர் விலை 1336.50 ஆக இருந்த நிலையில் தற்போது (பிப்ரவரி) 1551.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நடப்பு மாதத்திற்கு இந்த விலைக்கே வர்த்த காஸ் சிலிண்டர்கள் விற்கப்படும்.
வர்த்தக காஸ் சிலிண்டர் விலை உயர்வால், சாலையோர உணவக உரிமையாளர்கள், தேநீர் கடைக்காரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.