திருச்சி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய வின்சென்ட் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். கடந்த 27 மாதங்களாக வேலை இழந்து தவித்து வரும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்ற அரசாணை பெறப்பட்டும் இதுவரை பணி வழங்காததால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 2018ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்தேன். 2018 செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் அன்றைய செயலாளராக இருந்த பேபி மற்றும் தேர்தல் அலுவலர் இருவரும் வராத நிலையில் மற்ற 100 உறுப்பினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மேலும் செயலாளரும், தேர்தல் அலுவலரும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வரவில்லை என்று ஒரு கடிதம் எழுதித் தர என்னை வற்புறுத்தினார்கள். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மூலம் கர்ணன் என்பவர் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
தலைவர் கர்ணன் என்னைப் பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த 2018 நவம்பர் மாதம் என்னை உத்தமர்சீலி ரேஷன் கடைக்கு பணி மாற்றம் செய்தார்கள். 6 மாத காலம் பணியாற்றி 2019 மே மாதம் ஆறாம் தேதி 30 ஆயிரத்து 822 ரூபாய் விற்பனை தொகையை சுற்றறிக்கை பூங்கொடியிடம் நேரடியாக சென்று கையில் ஒப்படைத்துவிட்டு சென்ற நிலையில் நான் பணத்தை கையாடல் செய்து விட்டேன் என்று கூறி என் மீது வழக்குத் தொடர்ந்து என்னை பணியில் இருந்து வெளியேற்றினார்கள். நான் நீதிமன்றத்தை நாடி அதன் மூலம் என் மீது சுமத்தப்பட்ட பொய்யான புகார்களை எதிர்த்து போராடி நீதிமன்ற ஆணை பெற்றேன். ஆனால் இதுவரை எனக்கு பணி வழங்காமல் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர்.கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி தவித்து வருகிறேன். எனவே நீதிமன்ற ஆணைப்படி எனக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.