தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தயாரித்து சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளது தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு. இதுகுறித்து தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் (தமிழ்நாடு) தலைவர் கே.வி. ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் முதன்முதலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, உழவர்கள் நலன் கருதி, கிராம பொருளாதாரம் உயர்வடைய வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதை இன்று (14.8.2021) சட்டப் பேரவையில் மத்திய அரசின் மூன்று வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு அர்ப்பணித்துள்ளது பாராட்டத்தக்கது.
இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு மக்கள் பயன்பெறும் நல்ல திட்டங்களை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இயற்கை ஆர்வலர் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் பெயர்களில் சிறப்பான திட்டத்தை உருவாக்கி, இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும், உழவர்களைப் பாதுகாக்கின்ற வகையில் நெல் சாதாரண ரகம் குவிண்டாலுக்கு ரூ. 2,015, சன்ன ரகத்திற்கு ரூ. 2,060 என கொள்முதல் விலை வைத்திருப்பதை வரவேற்கிறோம். இதனால் 35 வருடகால வரலாற்றில் இல்லாத வகையில் 4.6 லட்சம் ஏக்கர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள். அதேபோல் கரும்பு டன்னுக்கு ரூ. 2,900 என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் கரும்பு பயிர் சாகுபடி பரப்பு அதிகரிக்கும். கரும்புக்கான நிலுவைத் தொகைகளை விவசாயிகள் பெற முதல்வரும் அமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
உழவர் நலன் காக்க வேளாண் மண்டல குழுக்கள், சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், இயற்கை வேளாண்மைக்குத் தனிப்பிரிவு போன்ற நல்ல திட்டங்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது. இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் ஈடுபடுத்தவும், உழவர் சந்தைகளை மேம்பாடு செய்யவும் புதிய சந்தைகளை உருவாக்கவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. கிராம மக்கள் வாழ்வாதாரம் மேம்படுத்த 2021 - 22ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கும் தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு சார்பில் நன்றியை, மகிழ்ச்சியை, நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்தனர்.